வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.

ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார் 

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார்.

சதுரங்கம்

சிருஸ்ட்டி வேட்கையில்
ஆனைமலைக் காடுகள் பாடுகிற
அந்தி மாலை.
அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்

உன்னையே சுற்றுதடி மனசு.
இது தீராத காதலடி

நீதான் கண்டு கொள்ளவில்லை
அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்
தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்
யானைபோல
உண்மையில் என் காதலும் பெரியதடி.
காமத்தில் சூரியன்
பொன்சிந்த இறங்கி வர.
நாணிப் புவிமகள்
முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..
ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற
உனது நாடகம் அல்லவா இது.

ஆண் பெண்ணுக்கிடையில்
ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை
எப்போதும் விரிகிறது.
என்னோடு இன்னும் சிலரை
பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்
வித்தைக்காரியில்தான் காதலானேன்.
அதனால் என்ன.
கீழே காட்டில் .
ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த
யானையும் இல்லை
ஒரு யானை மட்டுமே மேய்ந்த
மூங்கில் புதரும் இல்லை.

எதுவும் செய்..
ஆனால்
இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.
நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top