கவிஞர் கருணாகரன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு.

கருணாகரன்  ஈழத்தின் முக்கியமான தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் கண்டவை.

கருணாகரன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் சிவராசா சிவகருணாகரன். தந்தையின் பெயர் கந்தையா சிவராசா. தாயார் சிவராசா சிவபாக்கியம். இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, பளை மகா வித்தியாலயம் (பளை மத்தியகல்லூரி) ஆகியவற்றில் கல்வி கற்றார். இடதுசாரியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் 1983 இல் ஈரோஸ் அமைப்பில் இணைந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் செயற்பட்டவர். ஈரோஸ் அமைப்பின் பொதுமை பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

1980 களின் முற்பகுதியிலிருந்து கவிதை, சிறுகதை, இலக்கியம், அரசியல், சமூகவியல் துறைகளில் விமர்சனம் எனப் பலதளங்களில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அத்துடன் சுயாதீன ஊடகவியலாளராக இருந்து சாதாரணமக்களையும் துறைசார்ந்த ஆளுமைகளையும் பல நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். மகிழ் பதிப்பகத்தின் வாயிலாக பலருடைய நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம்சிங்களம்கன்னடம்மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்ப்புக்குள்ளாகியுள்ளன. இப்படி ஒரு காலம் என்ற கட்டுரைத் தொகுப்பு Wanni Mathaga (வன்னி நினைவுகள்) என்ற பெயரில் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கவிதைத் தொகுதிகள்

  1. ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் (மகிழ் – 1999)
  2. ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள் (மகிழ் – 2003)
  3. பலியாடு (வடலி – 2009)
  4. எதுவுமல்ல எதுவும் (மகிழ் – 2010)
  5. ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள் (கருப்புப்பிரதிகள் – 2012)
  6. நெருப்பின் உதிரம் ( மகிழ் – 2014)
  7. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் ( காலச்சுவடு 2015)
  8. படுவான்கரைக் குறிப்புகள் (மகிழ் – 2015)
  9. நினைவின் இறுதி நாள் (புது எழுத்து – 2020)
  10. உலகின் முதல் ரகசியம் (புலம் – 2020)
  11. கடவுள் என்பது துரோகியாயிருத்தல் (யாவரும் – 2021)
  12. இரவின் தூரம் (நடு 2021)
  13. மௌனத்தின் மீது வேறொருவன் (தாயதி 2021)

சிறுகதைகள்

  • வேட்டைத்தோப்பு (கயல்கவின் 2014)

கட்டுரை

  • இப்படி ஒரு காலம் (கரைச்சி கலாச்சாரப்பேரவை – 2014)
  • அன்பின் திசைகள் (மகிழ் 2018)

நேர்காணல்

ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை (எதிர் பதிப்பகம் 2016)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top