இந்திய– ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், உணர்ச்சிக் கவிஞர்
காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார்
காசி ஆனந்தன் (1938 – ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்.
தமிழ்நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963 இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இன் பின்னர் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி சென்றார்.
தெருப்புலவர், உயிர் தமிழுக்கு(1961), தமிழன் கனவு(1970), காசி ஆனந்தன் கவிதைகள் (1981 பாகம் 1,2), சுவர்க்கவிகள் உட்படப் பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். காசி ஆனந்தன் கதைகள், நறுக்குகள் ஆகியன இவரது சிறுகதைகளாகும்.இவர் தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
கவிதைத் தொகுப்புகள்
- தெருப்புலவர்
- உயிர் தமிழுக்கு – 1961
- தமிழன் கனவு – 1970
- காசி ஆனந்தன் கவிதைகள் – 1981 (பாகம் 1, 2)
- சுவர்க்கவிகள் – உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார்.
- பிரபாகரன் நெருப்பின் பிறப்பு
- பெண்பா
- நறுக்குகள் பாகம்-2
சிறுகதைகள்
- காசி ஆனந்தன் கதைகள்
- நறுக்குகள்
